வரத்து குறைவால், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளி விலை உயர்வு


வரத்து குறைவால், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 7:46 PM GMT)

வரத்து குறைவால் பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகாவில் சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, விருப்பாச்சி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் சில விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதேபோல் பழனி தக்காளி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது. அந்தவகையில் 14 கிலோ எடை கொண்டு ஒரு பெட்டி தக்காளி ரூ.600 வரையில் நேற்று விற்பனையானது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கோடை என்பதால் தற்போது பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை. எனவே குறைந்தளவு தண்ணீரை கொண்டு சில இடங்களில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. எனவே தற்போது விலை அதிகரித்துள்ளது என்றார். இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story