குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு, சாக்கடை கால்வாயில் தள்ளி விட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு - தாய், மகன் கைது


குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு, சாக்கடை கால்வாயில் தள்ளி விட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு - தாய், மகன் கைது
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 7:47 PM GMT)

கம்பத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்,

கம்பம் டி.டி.வி தினகரன் நகரை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 60). இவரது மகன் கார்த்திக் (21). இவர்கள் அதேபகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த 7-ந் தேதி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்களான கன்னியம்மாள்(40) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (24) ஆகியோர் தண்ணீர் பிடிக்க வந்துள்ளனர்.

அப்போது தண்ணீர் பிடிப்பதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கன்னியம்மாள் முனியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து கார்த்திக், கன்னியம்மாள் குடும்பத்தினரை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கன்னியம்மாள், மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்க முயன்றனர். அப்போது கார்த்திக்கை தாக்கவிடாமல் முனியம்மாள் அவர்களை தடுத்தார். இந்தசமயத்தில் கன்னியம்மாளும், மணிகண்டனும் சேர்ந்து முனியம்மாளை அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டனர்.

இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து வழக்குப்பதிவு செய்து கன்னியம்மாள், மணிகண்டனை கைது செய்தார்.

Next Story