வெயில் கொடுமை; வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
புதுவையில் வெயில் கொளுத்தி வருவதால் வெளியில் தலைகாட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இரவிலும் வெப்பமாக இருந்து வருகிறது. பொழுது விடிந்ததுமே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. காலை 9 மணிக்கே வெயில் தகிக்கிறது. தொடர்ந்து பகல் பொழுதிலும் இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியேறாமல் முடங்கி கிடக்கிறார்கள்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர்.
வெயிலை சமாளிக்க இளநீர், தர்பூசணி, பழச்சாறுகள், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், நுங்கு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விடுமுறையை கொண்டாட புதுவைக்கு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகை தருகிறார்கள். இவர்களும் வெயிலுக்கு வெளியே வராமல் ஓட்டல் அறைகளுக்குள்ளேயே இருந்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்பட்டன. கடற்கரையும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வெயில் குறைந்த பிறகு மாலை வேளையில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அவர்கள் சென்று மகிழ்கின்றனர். இதேபோல் உள்ளூர் பொதுமக்களும் பகல் முழுவதும் வீட்டிற்குள் முடங்கிய நிலையில் மாலையில் கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு வந்து காற்று வாங்குகின்றனர்.
Related Tags :
Next Story