உரிமம் பெறாமல் ரசாயனம் விற்பனை செய்தால் அபராதம் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
உரிமம் பெறாமல் ரசாயனம் விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் ரசாயனம், அமிலங்கள் பயன்பாட்டினை முறைப்படுத்தவும், தவறான பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் துணை கலெக்டர்கள் ஷஷ்வத் சவுரப், சுதாகர், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், மாறன், ரங்கநாதன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையாளர்கள், கல்வித்துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர் அருண், புதுச்சேரியில் விஷ பொருட்கள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை விதிகள் 2014-ன் படி அமிலங்கள், ரசாயனம், பிற நச்சுப்பொருட்கள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், தவறாக உபயோகப்படுத்துவதற்கு இடம் கொடுக்காமல் உறுதி செய்திடவும் மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதன் நோக்கம் தொழிற்சாலைகளில் விபத்துகளை தடுப்பது, அசம்பாவிதங்கள் மற்றும் ரசாயன தாக்குதலை தடுப்பது போன்றவை என்று விளக்கி கூறினார். தொடர்ந்து இந்த விதிகளை முறையாக செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
கூட்டத்தில், அமிலம் மற்றும் விஷ மருந்துகள் உபயோகப்படுத்துதல் தொடர்புடைய நிறுவனங்கள், வணிகர்கள், கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனை, மருந்தகம், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் விஷ மருந்துகள் வைத்திருக்கவும், விற்பனை செய்யவும் ஒரு மாத காலத்திற்குள் (20.6.2019) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் ரசாயனத்தை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் மாவட்ட துணை கலெக்டரால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story