மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து : 13 பேர் உடல் நசுங்கி பலி
மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் டெம்போ வேன் மீது லாரி கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியானார்கள்.
மும்பை,
புல்தானா மாவட்டம் மல்காப்பூர் பகுதியில் உள்ள அனுராபாத் கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேற்று டெம்போ வேனில் அருகில் உள்ள டவுன் பகுதிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு பிற்பகலில் அனுராபாத் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
மும்பை- நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மல்காப்பூர் பகுதியை நெருங்கியபோது அந்த வழியாக உப்பு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடியது. அந்த லாரி ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்ற டெம்போ வேன் மீது விழுந்து அமுக்கியது.
இதில் டெம்போ வேன் லாரிக்கு அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கினர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்தனர். டெம்போ வேன் மீது விழுந்த லாரியை கிரேன் மூலம் தூக்கி அகற்றினர். பின்பு அந்த வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நொறுங்கி கிடந்த டெம்போ வேனில் இருந்து 13 பேரை பிணமாக மீட்டனர். இதில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் 5 பேர் அனுராபாத், 6 பேர் நாக்சாரி மற்றும் 2 பேர் புசாவல் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இருந்து 400 உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடந்த 18-ந் தேதி நாக்பூர் நோக்கி புறப்பட்டது.
இந்த லாரி தான் எமனாக மாறி 13 பேரின் உயிரை பறித்து உள்ளது. லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story