போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை : 1 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு


போலீசாருடன் நக்சலைட்டுகள் துப்பாக்கி சண்டை : 1 மணி நேரம் நீடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 May 2019 12:15 AM GMT (Updated: 20 May 2019 11:19 PM GMT)

கட்சிரோலியில் நேற்று போலீசார் மற்றும் நக்சலைட்டுகள் இடையே 1 மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சிரோலி,

கட்சிரோலி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். கடந்த மாதம் 27-ந்தேதி போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நக்சலைட்டுகள் கடந்த 1-ந்தேதி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 25 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த நக்சலைட்டு தடுப்பு கமாண்டோ படையினர் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தி 16 வீரர்களை கொன்று குவித்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் 2 பெண் நக்சலைட்டுகளை கொன்ற போலீசாரை கொடூரமாக கொலை செய்வோம் என நக்சலைட்டுகள் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கட்சிரோலி மாவட்ட காட்டுப்பகுதிகளில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள கோபர்சி கிராம வனப்பகுதியில் நேற்று நக்சலைட்டு தடுப்பு கமாண்டோ படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கோதி புறக்காவல் நிலையம் அருகே காலை 6.30 மணி அளவில் கமாண்டோ படை வீரர்களை நோக்கி மறைந்திருந்த நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டை 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. போலீசாரின் பதிலடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நக்சலைட்டுகள் அங்கிருந்து பின் வாங்கி காட்டில் ஓடிமறைந்து விட்டனர்.

இந்த கடும் துப்பாக்கி சண்டையில் இரு தரப்பிலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதைத்தொடர்ந்து நக்சலைட்டுகள் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story