மழைநீரை அகற்றாததால், காகித கப்பல் விடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்


மழைநீரை அகற்றாததால், காகித கப்பல் விடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 11:56 PM GMT)

சிவகாசி அருகே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றாததால் காகித கப்பல் விடும் போராட்டத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

சிவகாசி,

சிவகாசி நகராட்சிப் பகுதியில் இருந்து பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதிக்கு செல்லும் சாலையில் விசாலாட்சி நகர் உள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதியின் எல்லையில் உள்ளதால் இந்த பகுதியில் சாலை அமைக்க நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் லேசான மழை பெய்தாலே இந்தப்பகுதியில் உள்ள சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாலையில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கியது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதி அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு மழை தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று காலை மழை தண்ணீரில் காகித கப்பல் விடும் போராட்டத்தை நடத்தினர். இதில் ஏராளமான சிறுவர்கள் பங்கு பெற்று காகித கப்பல்களை மழைநீரில் விட்டனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

விசாலாட்சி நகரில் சில இடங்களில் மழை தண்ணீர் அதிகளவில் தேங்குகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி, சிவகாந்தி நகர், விவேகானந்தர் காலனி, பத்திரகாளியம்மன் காலனி, சேனையார்புரம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் பட்டாசு தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைத்து மழை தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தண்ணீரில் காகித கப்பல் விடும் போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சில மணி நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story