மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய போட்டிக்கு தேர்வான பெண் - கலெக்டரிடம் நிதி உதவி கேட்டு மனு
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய போட்டிக்கு தேர்வான பெண் வறுமையில் வாடுவதால், அவர் கலெக்டரிடம் நிதி உதவி கேட்டு மனு கொடுத்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த சக்கந்தி மில் கேட் பகுதியை சேர்ந்தவர் சுபஜா (வயது 27). இவர் இருகால்களும் இழந்த மாற்றுத்திறனாளி. இந்தநிலையில் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடை பந்து விளையாட்டிற்கான தேசிய போட்டியில் தேர்வு பெற்றுள்ளார். இவர் போட்டியில் கலந்து கொள்ளவும், மேலும் விளையாட்டில் பல சாதனைகள் புரியவும் தன்னிடம் போதிய வசதி இல்லாத நிலையில் அவர் கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்த வெள்ளக்கோடு என்னுடைய பெற்றோர் இறந்து விட்டனர். கடந்த 10 வருடத்திற்கு முன்பு நாகர்கோவிலில் ரெயில் ஏறும்போது தவறி விழுந்ததில் முழுங்காலுக்கு கீழே என்னுடைய 2 கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. பெற்றோரை இழந்து ஆதரவற்ற நான் சிவகங்கை வந்து இங்குள்ள தனியார் மில்லில் செயற்கை கால் உதவியுடன் வேலை பார்த்து வந்தேன்.
கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் உடைய நான் சக்கர நாற்காலி உதவியுடன் தொடர்ந்து கூடை பந்து விளையாடி வருகிறேன். சமீபத்தில் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு விளையாடி தேசிய போட்டிக்கு தமிழக அணி சார்பில் விளையாட தேர்வு பெற்றுள்ளேன்.
இந்த போட்டி பஞ்சாப்பில் அடுத்த மாதம் (ஜூன்) 21 முதல் 30-ந்தேதி முடிய நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு நான் பஞ்சாப் செல்ல நிதி ஆதாரம் இன்றி தவிக்கிறேன். எனவே எனக்கு தேசிய போட்டியிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள நிதி உதவி செய்ய வேண்டும். என்னுடைய லட்சியம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story