இரு கிராமத்தினர் இடையே மோதல், நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் - வீடுகள், மோட்டார் சைக்கிள் சேதம்
ராமநாதபுரம் அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் எதிரொலியாக நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த கும்பல் வீடுகள், மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் பாப்பாகுடி பகுதியினருக்கும், கவரங்குளம் பகுதியினருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பாகுடி செல்லும் வழியில் உள்ள பாலத்தின் அருகில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது ஆஸ்பத்திரி வளாகத்தில் மீண்டும் மோதிக்கொண்டனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவரங்குளம் பகுதியை சேர்ந்த சிலர் பாப்பாகுடி கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியதோடு, கூரை கொட்டகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.
பாப்பாகுடி கிராமத்தில் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதால் பதற்றம் நிலவியது. சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு போலீஸ் பாதுகாப்பினை பலப்படுத்த உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருகிராமத்தினரிடையே ஏற்பட்ட இந்த தொடர் மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- பாப்பாகுடி பாலம் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பால பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாப்பாகுடி கிராமத்திற்குள் புகுந்த கவரங்குளம் பகுதியை சேர்ந்த கும்பல் வீடுகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு எதுவும் நடைபெறவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாப்பாகுடி, கவரங்குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய நேற்று அதிகாலையில் கவரங்குளத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் இதில் தொடர்புடைய யாரும் வீட்டில் இல்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனை தொடர்ந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 12 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேலும் சிலரை தேடிவருகிறோம். உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தற்போதைய நிலையில் 2 கிராமத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அமைதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய கவரங்குளம் கிராமத்தினரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாப்பாகுடி கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story