ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 3:10 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதுதொடர்பாக பல இடங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நேற்று நாகையை அடுத்த பாலையூரில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிப்பது. இந்த திட்டங்களை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் டெல்டா மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். திருப்பூண்டி, திருக்காரவாசல், கரியாப்பட்டினம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை எதிர்த்து அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதேபோல நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவர்கள் அங்குள்ள வெள்ளையாற்றில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது மீனவர்களையும், மீன் இனபெருக்கத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம். கடல் வளத்தை அளிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இதனால் லட்சக்கணக்கில் விவசாய மற்றும் மீனவ குடும்பங்கள் அழியும். வேதாந்தா குழுமத்தின் திட்டத்தை முறியடிப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

Next Story