போத்தனூர் அருகே மோதல், 2 வாலிபர்கள் படுகொலை - போலீஸ் விசாரணை


போத்தனூர் அருகே மோதல், 2 வாலிபர்கள் படுகொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 6:51 PM GMT)

போத்தனூர் அருகே நடந்த மோதலில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜான்பிரிட்டோ (வயது 28). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நடந்த கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்ததார். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜான் பிரிட்டோ தனது நண்பவர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் போத்தனூர் ஆட்டுத்தொட்டி அருகே வந்தார். அப்போது அதே வழியாக போத்தனூர் மேட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்த காட்வின் (30) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான் பிரிட்டோ, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்வினை சராமாரியாக குத்தினார். அதன்பின்னர் ஜான்பிரிட்டோவும், நண்பர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய காட்வினை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காட்வினை கத்தியால் குத்திய ஜான்பிரிட்டோ மற்றும் அவரது நண்பர்களை பழி வாங்குவதற்காக காட்வின் நண்பர்கள் ஜான் பிரிட்டோ வீட்டுக்கு இரவோடு இரவாக சென்றனர்.

அங்கு சென்றதும் ஜான்பிரிட்டோவிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த ஜான்பிரிட்டோவின் தந்தை ஜெயபிரகாஷ் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் காட்வின் நண்பர்கள் சமாதானம் அடையவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த காட்வின் நண்பர்கள் ஜான்பிரிட்டோவை அவரது வீட்டு வாசலில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜான்பிரிட்டோவை அவரது தந்தை மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜான்பிரிட்டோ இறந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து போத்தனூர் போலீசார் ஜான் பிரிட்டோ கொலை தொடர்பாக காட்வின் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ஜான்பிரிட்டோ குத்தியதில் படுகாயம் அடைந்திருந்த காட்வின், நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காட்வின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட காட்வின் மீதும் பல்வேறு அடிதடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போத்தனூர் அருகே நடந்த மோதலில் இரு தரப்பிலும் தலா ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக காட்வின் மற்றும் ஜான் பிரிட்டோவின் நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story