லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி சாவில் மர்மம் - விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு நியமனம்


லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி சாவில் மர்மம் - விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு நியமனம்
x
தினத்தந்தி 22 May 2019 3:45 AM IST (Updated: 22 May 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமியின் மர்ம சாவு குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை,

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமி. சமீபத்தில் மார்ட்டின் நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான சோதனையை தொடர்ந்து, பழனிச்சாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 3-ந் தேதி மாலை கோவை மாவட்டம் காரமடை அருகே ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் ரோகின்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் பலரது தலையீடு இருப்பதாகவும், உண்மைகளை மறைக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் விரிவான விசாரணை நடத்தவும் அவர் கோரி இருந்தார்.

இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க ஒரு மாஜிஸ்திரேட்டை கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நியமிக்க வேண்டும் என்றும், அந்த மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தும்போது சந்தேகம் ஏற்பட்டால் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடலாம் என்றும் அப்போது மனுதாரர் தரப்பில் ஒரு அரசு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கடிதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு கிடைத்தது. அதன்பேரில் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமியின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த கோவை 8-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராமதாசை நியமித்து நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் விரைவில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

இதற்கிடையில் பழனிச்சாமியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒருவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவரின் உள் உறுப்புகள் ‘விஸ்கிரா’ என்ற சோதனைக்காக அனுப்பப்படும். அதேபோல பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவருடைய உள் உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த உறுப்புகளில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது இதன் மூலம் தெரியவரும். அடுத்து ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனால் அவர் அந்த குளத்தில் தான் மூழ்கி இறந்து போனார் என்பதை ‘டயடாம்’ என்ற சோதனையின் மூலம் கண்டறியலாம். தண்ணீரில் மூழ்கும் ஒருவரின் உணவு குழாய், இரைப்பை போன்ற உள் உறுப்புகளில் அந்த குளத்து தண்ணீரில் உள்ள நுண்பொருட்கள் தங்கியிருக்கும். அந்த நுண்பொருளும், மூழ்கி இறந்த குளத்தில் காணப்படும் நுண்பொருளும் ஒரே மாதிரியாக இருந்தால் அந்த நபர் அந்த குளத்தில் தான் மூழ்கி இறந்தார் என்ற முடிவுக்கு வர முடியும். அதன்படி பழனிச்சாமியின் உள்உறுப்புகள் ‘டயடாம்’ என்ற சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் வந்ததும் இறப்பின் உண்மை தன்மை தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழனிச்சாமி மர்மசாவு புகாரை தொடர்ந்து அவரது உடல் கடந்த 18 நாட்களாக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story