ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 7:05 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவீதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க விவசாய நிலங்களையும், நெற்பயிர், பருத்தி போன்ற பயிர்களையும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நாசம் செய்து வருகிறது. எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும். எரிவாயு குழாய் பதிக்கும் பணியை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

4-ந் தேதி ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாவுதீன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க நிர்வாகி கல்யாணசுந்தரம், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி

பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி விழுப்புரம் முதல் ராமநாதபுரம் வரை 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

Next Story