தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது


தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 7:13 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது உண்டு. அதுமட்டுமின்றி உளுந்து, எள், பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்கள் எல்லாம், எந்த சாகுபடியும் நடைபெறாமல் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் செய்யக்கூடிய விவசாயிகள், முன்பட்ட குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும்.

இதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் உர தொழிற்சாலையில் இருந்து 965 டன் யூரியா உரம், 316 டன் டி.ஏ.பி. உரம் சரக்கு ரெயிலில் 21 வேகன்கள் மூலம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டன. பின்னர் இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story