கோவில்பட்டி அருகே கண்மாயில் சரள் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம்-லாரி சிறைபிடிப்பு


கோவில்பட்டி அருகே கண்மாயில் சரள் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம்-லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 22 May 2019 4:00 AM IST (Updated: 22 May 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கண்மாயில் சரள் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பஞ்சாயத்தில் ஆலம்பட்டி, அத்தைகொண்டான், கங்கன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஆலம்பட்டியில் சுமார் 67 ஏக்கரில் கண்மாய் உள்ளது. இதன்மூலம் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த கண்மாயில் உள்ள கீழ மற்றும் மேல மடைகளை சீரமைக்க வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆலம்பட்டி கண்மாயில் இருந்து சரள் மண் அள்ளி கரைகளை பலப்படுத்த ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கண்மாயின் மேற்கு பகுதியில் ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரையின் தெற்கு பகுதியில் கண்மாயில் இருந்து அள்ளப்பட்ட சரள் மண் கரையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கண்மாயின் கிழக்கு பகுதியில் ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 5 லாரிகளில் வந்த சிலர் அங்கிருந்து சரள் மண்ணை அனுமதியின்றி லாரிகளில் அள்ளி வெளியே கொண்டு சென்றனர். இதை அறிந்த ஆலம்பட்டி கிராம மக்கள் லாரிகளை விரட்டி சென்றனர். அதற்குள் லாரிகள் சென்றுவிட்டன. இதையடுத்து பொக்லைன் எந்திரத்தை இயக்குபவரிடம், இங்கு மண் அள்ளக்கூடாது. இதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மீண்டும் கண்மாயின் கிழக்கு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் 5 லாரிகளில் சிலர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களை பார்த்தவுடன் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் 4 லாரிகளில் சென்று விட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் கிராம மக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story