கோவில்பட்டியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கோவில்பட்டியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 7:24 PM GMT)

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரி கோவில்பட்டியில் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில், மாவட்ட தலைவர் வெள்ளத்துரை உள்பட ஏராளமான விவசாயிகள் வந்தனர். அவர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பானுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவில்பட்டி அருகே உள்ள செட்டிக்குறிச்சி துணை மின்நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் மும்முனை மின்சாரத்தை பகுதி நேரமாக மாற்றப்போவதாக மின்வாரியம் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே வறட்சி நீடிக்கும் நிலையில் பகுதி நேரமாக மின்சார வினியோகத்தை மாற்றினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கோடை வெயில் காரணமாக கிணறுகளில் தண்ணீர் இல்லை. தண்ணீரை ஊற வைத்தே மோட்டார் மூலம் எடுத்து நாள் ஒன்றுக்கு 5 முறை வரை தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் இருந்தால் தான் உபயோகமாக இருக்கும். எனவே செட்டிக்குறிச்சி பகுதி விவசாயிகள் காய்கறி, உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story