5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் கலெக்டர் தகவல்


5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 7:50 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று வாய்வழி உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் குறித்து 2 வார முகாம் நடத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வருகிற 28-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப் படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் தொடர்பான 2 வார முகாம் நடைபெற உள்ளது.

உப்பு, சர்க்கரை பொட்டலங்கள்

அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு, வீடாக சென்று வாய்வழி உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் 12 அரசு மருத் துவமனைகள், 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள், 3 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,799 அங்கன்வாடி மையங்களிலும் நாள்தோறும் உப்பு, சர்க்கரை கரைசல் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.இதேபோல தாய்ப் பாலின் முக்கியத்துவம் குறித்தும், பாலூட்டும் தாய்மார் களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட உள்ளது. இம்முகாமின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 224 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இதுகுறித்து போதிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட துறைக்கு அறி வுறுத்தப்பட்டு உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை இம்முகாமில் தவறாமல் பங்கேற்க செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பொதுசுகாதார துணை இயக்குனர் பரணி தரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திர சேகரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story