நாளை வாக்கு எண்ணிக்கை, விருதுநகர் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் - காலை 8 மணிக்கு தொடங்குகிறது


நாளை வாக்கு எண்ணிக்கை, விருதுநகர் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் - காலை 8 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 May 2019 10:45 PM GMT (Updated: 21 May 2019 7:54 PM GMT)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி யுள்ளன. இந்த 6 தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்ப்பு காகித ஆய்வு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல இடைத்தேர்தல் நடந்த சாத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு காகித சரிபார்ப்பு எந்திரங்கள் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்குகள் எண்ணிக்கை நாளை தொடங்குகிறது. விருதுநகரிலும் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் தேர்தல் கமிஷனின் புதிய உத்தரவுப்படி தபால் ஓட்டுக்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்படும்.

நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே 6 பிரிவுகளாக அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு ஒவ்வொரு மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேஜைகள் போடப்படும் நிலையில் 282 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 20 சதவீத அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ள நிலையில் 51 கூடுதல் அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மேஜைக்கு 1 முகவர் வீதம் 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு முகவர் என மொத்தம் 15 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை பெற்ற பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 20 முதல் 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி அதனை சரிபார்த்த பின்பு ஓட்டு விவரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். பின்னர் ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள கரும்பலகையில் எழுதப்படும். அதன் பின்னர்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை அறையில் தேசிய கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள், மாநில கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் முகவர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் என்ற வரிசையில் முகவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 1 மணி நேரத்தில் முன்னணி விவரம் தெரிய வாய்ப்பு ஏற்படும். அதன்பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குப்பதிவு சரிபார்ப்பு காகித ஆய்வு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால் அந்த வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்தும் அறிவிப்பு வெளியிட தாமதம் ஏற்படும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சிவஞானமும், இடைத்தேர்தல் நடந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக சாத்தூர் ஆர்.டி.ஓ. காளிமுத்துவும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை கண்காணிப்பார்கள்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 80 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 217 வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப் பதிவு சதவீதம் 72.01. இடைத்தேர்தல் நடந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 861 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது 78.94 சதவீதம் ஆகும்.

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்த தேர்தல் பிரிவு அதிகாரி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்ளும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியேயும் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் நிர்வாகம் முறையாக திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Next Story