இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம்


இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 3:45 AM IST (Updated: 22 May 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

மேலகிருஷ்ணன்புதூர் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் காதலனுடன் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

மேலகிருஷ்ணன்புதூர் அருகே பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடியப்பட்டிணத்தை சேர்ந்த வாலிபரை பேசி முடித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். அந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது திருமணம் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

இருவீட்டாரும் பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினார்கள். அத்துடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது.

மாயம்

இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அத்துடன் அவருக்காக வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தையும் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளம்பெண்ணை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போது, அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். ஆனால், காதலனை மறக்க முடியாமல் இளம்பெண் தவித்தார். இறுதியில் அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

வேறொரு பெண்ணுடன் திருமணம்

திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண் மாயமான தகவல் கடியப்பட்டிணத்தில் உள்ள மணமகன் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த வாலிபருக்கு நிச்சயிக்கப்பட்ட நாளில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

பறக்கை அருகே உள்ள பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 29 வயதுடைய மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த தொழிலாளியின் மனைவி திடீரென மாயமானார். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளம்பெண், ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.

Next Story