பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடு - கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பேட்டி
பலத்த பாதுகாப்புடன் நாளை (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
திருப்பூர்,
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கே.எஸ்.பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. கலைக்கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் கொண்டு செல்லலாம். மற்றவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. பேனா, பென்சில், கால்குலேட்டர் போன்ற எந்தவித பொருட்களும் எடுத்து செல்ல அனுமதியில்லை. கல்லூரியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஒவ்வொரு சுற்று முடிவையும் அறிவிக்க பொது வசதி செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் மற்றும் தலைமை ஏஜெண்ட் ஆகியோர் அனைத்து தொகுதி வாக்குகள் எண்ணும் அறைகளுக்கு சென்று பார்வையிடலாம். இதர ஏஜெண்டுகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். மற்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதியில்லை.வாக்கு எண்ணும் அலுவலர்கள் ரேண்டம் முறையில் சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர். அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1704.
வாக்கு எண்ணுவதற்காக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி எண்ணிக்கை பொருத்து அதன் வாக்கு எண்ணும் சுற்றுகள் அமையும்.
அதன்படி பவானி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும், அந்தியூர்- 19, பெருந்துறை-19, திருப்பூர் வடக்கு-26, திருப்பூர் தெற்கு-17, கோபி செட்டிப்பாளையம்-22 ஆகிய சுற்றுகளுமாக எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் போடப்பட்டுள்ள 14 மேஜைக்கும் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படும். வாக்கு எண்ணும்போது ஒரு மேஜைக்கு அலுவலர்கள் 3 பேர் இருப்பார்கள். அவர்கள் வாக்கு எண்ணுவதை பார்வையிடுவார்கள். அதன்படி ஒரு மேஜைக்கு ஒரு ஏஜெண்ட் வீதம் 14 மேஜைக்கும் 14 ஏஜெண்டுகள் இருப்பார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டவுடன், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குச்சாவடி வீதம் அந்தந்த ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்வுசெய்யப்படும். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான சீட்டுகளுடன் ஒப்பீட்டு எண்ணி சரிபார்க்கப்படும்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தபால் ஓட்டுகள் இதுவரை 4,290 வந்துள்ளது. அதில் படை வீரர்களின் தபால் ஓட்டுகளும் 104 அடங்கும். இந்த தபால் ஓட்டுகள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவை 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் 23-ந் தேதி காலை 7 மணி வரை கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகளை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வருமாறு தபால் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு தனி மேஜை போடப்பட்டு இருக்கும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 4 மேஜை வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கும் 24 மேஜை போடப்பட்டு இருக்கும்.
வாக்கு எண்ணும் போது மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தலைமையில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 52 சப்-இன்ஸ்பெக்டர்கள், 200 போலீசார், துணை ராணுவ வீரர்கள், சிறப்பு போலீசார், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 477 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியை பார்வையிட 3 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்கள், கலெக்டருடன் சேர்ந்து வாக்கு எண்ணும் பணியை பார்வையிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story