தனியார் நிறுவன சாலை பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தனியார் நிறுவன சாலை பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 3:22 AM IST (Updated: 22 May 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன சாலை அமைக்கும் பணிக்காக வரும் வாகனங்கள் மற்றும் இரைச்சலால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் 1,156 பேர் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்த நிறுவனத்தினர் 15 அடி உயரத்தில் மதில்சுவர் அமைத்துள்ளனர். நிறுவனத்தின் மையப்பகுதியில் 400 அடி சாலையுடன், ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. தனியார் நிறுவன சாலை அமைக்கும் பணிக்காக வரும் வாகனங்கள் மற்றும் இரைச்சலால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதை கண்டித்து மாவட்ட கலெக்டர், அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தனியார் நிறுவன சாலை அமைக்கும் பணியை கண்டித்து நேற்று காட்டுப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போலீசார் வரும் 27-ந்தேதி வரை தனியார் நிறுவனத்தினர் சாலைப்பணிகள் எதுவும் செய்யக்கூடாது என்று தெரிவித்ததையடுத்து சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
1 More update

Next Story