ரோஷன் பெய்க்கின் கருத்து பொறுப்பற்றது : மல்லிகார்ஜுன கார்கே பேட்டி


ரோஷன் பெய்க்கின் கருத்து பொறுப்பற்றது : மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
x
தினத்தந்தி 22 May 2019 4:53 AM IST (Updated: 22 May 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

ரோஷன் பெய்க்கின் கருத்து பொறுப்பற்றது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி என்கிறபோது அனைவருக்கும் சில விஷயங்களில் அதிருப்தி இருப்பது சகஜமானது தான். அதற்காக அந்த விஷயங்களை ஊடகங்களிடம் கூறி, பிரச்சினையை உருவாக்குவது சரியா?. இதனால் கட்சியின் புகழுக்கும், பெருமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், அதை தலைவர்களிடம் கூறி அவற்றுக்கு தீர்வு கண்டுகொள்ள வேண்டும். ரோஷன் பெய்க்கின் கருத்து, உண்மையிலேயே பொறுப்பற்றது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் கூறுகையில், “காங்கிரசில் நீண்ட காலம் மந்திரி பதவியை அனுபவித்தவர் ரோஷன் பெய்க். இப்போது கூட்டணி அரசில் அவருக்கு பதவி கிடைக்கவில்லை. மந்திரி பதவியில் இருந்தபோது, சித்தராமையா அவருக்கு நல்லவராக தெரிந்தார். பதவியில் இல்லாதபோது சித்தராமையாவை அவர் குறை சொல்கிறார். இது சரியல்ல. அதிகாரம் என்பது யாருக்கும் நிரந்தரம் அல்ல. நான் மந்திரி பதவி ஏற்று ஓராண்டு ஆகிறது. இன்னும் ஓராண்டு இந்த பதவியில் இருப்பேன். அதன் பிறகு வேறு ஒருவருக்கு பதவியை விட்டுக்கொடுப்பேன்” என்றார்.

மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத் கூறும்போது, “மந்திரி பதவி கிடைக்கவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், ரோஷன் பெய்க் கட்சிக்கு எதிராக பேசுகிறார். தைரியம் இருந்தால் அவர் காங்கிரசை விட்டு விலகட்டும். மத்திய பெங்களூரு தொகுதியில் அவர் யாருக்கு தேர்தல் பணியாற்றினார் என்பது எங்களுக்கு தெரியும். இதை அவர் தனது மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்” என்றார்.

நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர்களை பற்றி ரோஷன் பெய்க் குறை கூறியது சரியல்ல. இது அவரது தலைமை பண்பு மீது விழுந்த கரும்புள்ளி ஆகும். அவர் மந்திரியாக இருந்தவர். கட்சிக்கு எதிராக பேசி பிரச்சினையை ஏற்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Next Story