கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி, 600 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி, 600 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 2:56 PM GMT)

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசி, 600 லிட்டர் மண்எண்ணெய்யை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அழகியமண்டபம்,

குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் அப்துல்லா மன்னான், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று காலையில் ஆளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஆளூர் ரெயில் நிலையத்திற்கு சென்ற போது, அங்கு சிறு, சிறு மூடைகளில் 1,700 கிலோ ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசிக்கு யாரும் உரிமை கோர வரவில்லை. இதையடுத்து அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல், திங்கள்சந்தை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது.

இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை துரத்தி சென்று மயிலோடு பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். உடனே, டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்த போது, அதில் 600 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில் அதை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காருடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்தனர்.  

பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை உடையர்விளை அரசு குடோனிலும், மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும் ஒப்படைத்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story