திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் இன்று நடக்கிறது


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை 2 மையங்களில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 4:06 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

அதேபோல் ஆரணி நாடாளுமன்ற தொகுதி போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி மற்றும் மைலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை, அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 15 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாக கட்டிடத்திலும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 70 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 570 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 77.78 சதவீத வாக்குப்பதிவாகும்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 781 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 699 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 78.97 சதவீத வாக்குப்பதிவாகும்.

இந்த நிலையில் நாடு முழுவதும் தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணி நடைபெறும். அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படுகிறது.

2 மையத்திலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குச்சீட்டுகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் கண்காணிப்பில் தனி அறையில் எண்ணப்படும்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு 24 சுற்றும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு 23 சுற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை யொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். கூட்டத்தை கட்டுக்குள் வைக்கும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் நடந்து செல்லும் வகையில் கம்புகளாலான தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் போலீஸ் ஐ.ஜி.நகராஜன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீசாரும் வாக்கு எண்ணும் மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story