இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்


இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்
x
தினத்தந்தி 23 May 2019 3:45 AM IST (Updated: 22 May 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.

இளம்பிள்ளை, 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 7, 8, 9 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள ரெட்டிப்பட்டி, ராமாபுரம், பள்ளக்காடு ஆகிய ஊர்களில் 1000–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு கஞ்சமலை அடிவாரம் வெள்ளந்திருப்பி பகுதியில் இருந்து காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 1 மாதமாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை. கோடை வறட்சியால் ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால் தனியார் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்த கிணறு வறண்டு விட்டதால் குடிநீர் பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை இளம்பிள்ளை– காக்காபாளையம் ரோட்டில் பெருமா கவுண்டம்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மகுடஞ்சாவடி போலீல் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் அங்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அமர்ந்து கொண்டனர். இதனை அறிந்த வீரபாண்டி ஒன்றிய ஆணையாளர் திருவேரங்கன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறும்போது, கடந்த 20 ஆண்டுகளாக வெள்ளந்திருப்பி பகுதியில் இருந்து காவிரி குடிநீர் வந்து கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக 3 ஊர்களுக்கும் தண்ணீர் வரவில்லை. குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பராமரிப்பு பணி செய்பவர்கள் குடிநீர் குழாயை அடைத்து விட்டனர், என்றனர்.

இதனை கேட்ட ஆணையாளர் திருவரங்கன் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story