கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டம்


கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 7:24 PM GMT)

செம்பனார்கோவில் அருகே விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்துக்கு எதிராக பூச்சிக்கொல்லி மருந்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘தற்கொலை செய்து கொள்வோம்’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொறையாறு,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்பட பல கிராமங்களில் சாகுபடி செய்த விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி உமையாள்புரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கெயில் நிறுவனத்தினர் தொடர்ந்து ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செம்பனார்கோவில் அருகே முக்கறும்பூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்திற்கு எதிராக பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள், விளைநிலங்களை பாழாக்கும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை உடனடியாக நிறுத்தவில்லையென்றால் ‘தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி கையில் பூச்சிக்கொல்லி மருந்துடன் கோஷங்கள் எழுப்பினர். மேலும், விளைநிலங்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story