போலீசில் மனைவி புகார்: மனம் உடைந்த மீனவர் தற்கொலை


போலீசில் மனைவி புகார்: மனம் உடைந்த மீனவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2019 3:45 AM IST (Updated: 23 May 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

போலீசில் மனைவி புகார் செய்ததால் மனம் உடைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ்குமார் (வயது 32). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மீனவரான தினேஷ்குமார், காசிமேட்டில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

தினேஷ்குமார், வீட்டு செலவுக்குக்கூட பணம் கொடுக்காமல் குடித்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சத்யா, நேற்று முன்தினம் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார்.

இதனால் மனம் உடைந்த தினேஷ்குமார், நேற்று தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எண்ணூர் காமராஜர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அஸ்வத் (31). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அஸ்வத், பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக்கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அஸ்வத், மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அஸ்வத், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story