காசிமேடு கடலில் கழுத்தில் கயிறுடன் பிணமாக கிடந்தார்: மீனவரை நண்பர்களே கொன்று வீசியது அம்பலம்


காசிமேடு கடலில் கழுத்தில் கயிறுடன் பிணமாக கிடந்தார்: மீனவரை நண்பர்களே கொன்று வீசியது அம்பலம்
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 8:17 PM GMT)

காசிமேடு கடலில் கழுத்தில் கயிறுடன் பிணமாக கிடந்த மீனவரை, அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்துவிட்டு கடலில் வீசியது தெரிந்தது. தங்களது குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசியதால் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

பெரம்பூர்,

சென்னை காசிமேடு பவர் குப்பம் 3-வது பிளாக்கை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 36). மீனவரான இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் ஐஸ் மற்றும் மீன்களை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்தார்.

கடந்த 9-ந் தேதி இரவு ஜான்சன், கழுத்தில் கயிறுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் 1-வது வார்ப்பு முனை பகுதியில் பிணமாக கிடந்தார். உடலில் காயம், கழுத்தில் கயிறுடன் கடலில் மிதந்ததால் யாராவது அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை கடலில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜான்சன் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டது உறுதியானது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த ராஜேஷ்(32), தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரவணன் (31) ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கொலையான ஜான்சனும், நாங்களும் நண்பர்கள். கடந்த 9-ந் தேதி இரவு 3 பேரும் மீன்பிடி துறைமுகம் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது எங்களது குடும்பத்தை பற்றி ஜான்சன் தரக்குறைவாக பேசி திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இருவரும் அருகில் இருந்த கட்டையால் ஜான்சனை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் மயங்கி விழுந்ததும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் கயிற்றுடன் உடலை கடலில் வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story