முறைகேட்டில் தொடர்புடைய 3 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


முறைகேட்டில் தொடர்புடைய 3 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 8:54 PM GMT)

முறைகேட்டில் தொடர்புடைய 3 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் லாபகரமாக கடந்த 48 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2017-18-ம் ஆண்டு நிர்வாக குழுவினர் ரூ.2 கோடியே 34 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியானது. இதையடுத்து, துணிநூல் கைத்தறித் துறை இயக்குநர் முனிநாதன் உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரியாக சாரதி சுப்புராஜ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அதில், நிர்வாகக் குழு தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் விசுவநாதன், இயக்குநர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உண்மைதான் என கைத்தறி துணிநூல் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேருக்கு நோட்டீஸ் வழங்கினார். இதைத்தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் பிரகாஷ் மற்றும் சங்க கணக்காளர் ரவி ஆகியோரை மார்ச் 30-ம் தேதி முதல் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஏப்ரல் மாதம் 23-ந்தேதி சங்கத் தலைவர் செல்வராஜை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி துணைத்தலைவராக இருக்கும் விஜயா என்பவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கி, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் பரிந்துரையின் பேரில், காஞ்சீபுரம் கைத்தறி துறை இணை இயக்குநர் செல்வம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சங்க உறுப்பினர் லோகநாதனை, சங்க இயக்குநர் விஸ்வநாதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகநாதன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேலான நெசவாளர்கள் நேற்று காலை காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, ஊழல் செய்த இயக்குனர்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் 2 மணி நேரம் நடந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் உடனடியாக நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றார்.

அப்போது நெசவாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இன்று(வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில், நெசவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story