அரியமங்கலத்தில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி


அரியமங்கலத்தில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 23 May 2019 3:45 AM IST (Updated: 23 May 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

அரியமங்கலத்தில் குப்பை லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் ரெயில் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அரவிந்த்(வயது 25). அதே பகுதி ஆண்டாள் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் கவுதம்(25). இவர் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்நிலையில் நண்பர்களான அரவிந்தும், கவுதமும் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. வழியாக மேலகல்கண்டார்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதேபோல் மேலகல்கண்டார்கோட்டையில் இருந்து குப்பை லாரி ஒன்று குப்பைகளை ஏற்றிக்கொண்டு அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு செல்வதற்காக எஸ்.ஐ.டி. ரோடு வழியாக பிருந்தாவனம் பள்ளி அருகே வந்தது.

2 பேர் பலி

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் குப்பை லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அரவிந்த் சாலையில் விழுந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவருடைய தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக இறந்தார். கவுதம் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் உயிரிழந்த அரவிந்த், கவுதம் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story