கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 9:18 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதிகளில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். ரோந்து போலீசாரும் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்குள்ளும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களுக்காக, மாவட்டம் முழுவதும் 610 இடங்களில் 1,694 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 வாக்குகள், அதாவது 69.80 சதவீதம் பதிவாகி இருந்தன.

இந்த வாக்குகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எண்ணப்பட இருக்கின்றன. எனவே கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 12 மேஜைகளிலும், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 10 மேஜைகளிலும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 28 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் 6 சட்டமன்ற தொகுதிக்கு 30 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும், வி.வி.பேட் கருவியில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இந்த 30 வாக்குச்சாவடிகள் எவை? எவை? என்பது இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

மேலும் வாக்குப்பதிவு அன்று சோதனை வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அழிக்காமல் விடப்பட்ட விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளுக்கு உட்பட்ட 3 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் ஒப்புகைச்சீட்டுகள் மூலம் எண்ணப்பட இருக்கின்றன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் காலை 7 மணிக்கு முன்பாக வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பலத்த சோதனைக்குப்பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன்கள் கொண்டுசெல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள பொதுமக்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் அறிந்து கொள்ள வசதியாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சுற்று முடிவுகள் காலை 9.30 மணிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவுகளும் 45 நிமிட நேர இடைவெளியில் வெளியாகும்.

இருப்பினும் வழக்கமாக வாக்குகள் எண்ணி முடிக்கும் நேரத்தைவிட இந்த முறை கூடுதல் நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புகைச் சீட்டுகள் எண்ணி ஒப்பிட்டுப் பார்க்கும் பணி மற்றும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கைக்கான கூடுதல் விதிமுறைகள் போன்றவற்றால் காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் முழுமையான முடிவு விவரம் தெரிய நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று காலை கலெக்டர் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பன போன்ற விவரங்கள் எடுத்து கூறப்பட்டன.

பின்னர் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story