வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் - முகவர்களுக்கு திருமாவளவன் அறிவுரை


வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் - முகவர்களுக்கு திருமாவளவன் அறிவுரை
x
தினத்தந்தி 23 May 2019 3:45 AM IST (Updated: 23 May 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது:-

இதுவரை 5 நாடாளுமன்ற தேர்தல், 3 சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்டேன். ஆனால் ஒருமுறை கூட வாக்கு எண்ணும் மையத்திற்கு நான் சென்றதில்லை. காரணம் நான் சென்றால் என்னுடன் கூட்டம் சேரும். தேவையில்லாத இடையூறு ஏற்படும். அதனால் நான் செல்லவில்லை.

பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் என்று இரண்டு எந்திரங்கள் உள்ளது. பேலட் யூனிட் என்பது வாக்களிக்கும் எந்திரம், கன்ட்ரோல் யூனிட் என்பது வாக்கை பதிவு செய்யும் எந்திரம். வாக்குப்பதிவு செய்வதற்கு கொடுக்கப்பட்ட எண்ணும், வாக்குப்பதிவு செய்த கருவியின் எண்ணும் முகவரான உங்களுக்கு கொடுக்கப்பட்ட எண்ணும் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

நாளை (இன்று) வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 12 மணி நேரம் எதையும் கவனத்தில் கொள்ளாமல் முழுக்க, முழுக்க வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே சென்றது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. வட இந்தியாவிலும் இதுபோன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே சென்று பின்னர் அவை பிடிபட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு வரும் வழியில்கூட ஏதேனும் நடக்கலாம் என்று நண்பர் ஒருவர் கூறுகிறார்.

எனவே நாம் முன்னணியில் இருந்தாலும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு பாதியிலேயே திரும்பிச்செல்லாமல் கடைசி வரை முழுமையாக இருக்க வேண்டும். கடந்த 2009-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நமது கட்சி வேட்பாளர் சாமித்துரை மதியம் 2 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறியதால்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதுபோன்று இந்த தேர்தலிலும் நடக்க வாய்ப்பு இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நமது முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். முடிவு அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து வேட்பாளர் பெறும் வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கருணாநிதி இல்லாத ஒரு சூழலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்போடு வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளார். அந்த வகையில் தோழமை கட்சிகள் கூட உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அன்புகட்டளை பிறப்பித்தார்.

நாளை (இன்று) மிக முக்கியமான நாள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாள். எனவே இங்கு வந்துள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உற்சாகத்தோடும், மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து ஸ்டாலினின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வெற்றிச்செய்தியை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story