கோவையில் நடந்த இரட்டைக்கொலை வழக்கு, நண்பரை குத்திக்கொன்றதால் பழிக்குப்பழி வாங்கினோம் - கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்


கோவையில் நடந்த இரட்டைக்கொலை வழக்கு, நண்பரை குத்திக்கொன்றதால் பழிக்குப்பழி வாங்கினோம் - கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 9:40 PM GMT)

நண்பரை குத்திக்கொன்றதால் பழிக்குப்பழி வாங்க கொன்றதாக கைதான 2 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

போத்தனூர், 

கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மகன் ஜான் பிரிட்டோ (வயது 28), டிரைவர். இவர் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. கடந்த 20-ந் தேதி ஜான் பிரிட்டோ தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர்கள் இருவரும் அங்குள்ள ஆட்டுத்தொட்டி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதே வழியாக போத்தனூர் மேட்டுத்தோட்டத்தை சேர்ந்த காட்வின் ராஜ் (30) என்பவர் வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததால் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் ஜான் பிரிட்டோ வீட்டிற்கு சென்று விட்டார். அதைத்தொடர்ந்து காட்வின்ராஜ், அவருடைய நண்பரான மில்டன் ராபின் (35), அனுமன்சேனா அமைப்பின்கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் நித்யகுமார் (34) ஆகியோர் சேர்ந்து ஜான் பிரிட்டோ வீட்டிற்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட தகராறில் ஜான் பிரிட்டோ தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்வின் ராஜை சரமாரியாக குத்தினார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, மில்டன் ராபின், நித்யகுமார் ஆகியோர் ஜான் பிரிட்டோ வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தினார்கள். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். அதுபோன்று சிகிச்சை பெற்று வந்த காட்வின் ராஜூம் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மில்டன் ராபின், நித்யகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

காட்வின்ராஜ், ஜான் பிரிட்டோ இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த 20-ந் தேதி ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுதான் மோதலுக்கு வழிவகுத்தது.

அப்போது ஜான் பிரிட்டோ, தான் ஒரு ரவுடியாக மாறிவிட்டதால் காட்வின்ராஜ், மில்டன் ராபின், நித்யகுமார் ஆகிய 3 பேரையும் கொன்றுவிடுவதாக கூறி உள்ளார். எனவே எங்களை அவர் கொல்வதற்குள் நாங்கள் அவரை கொன்றுவிட முடிவு செய்தோம்.

இதைத்தொடர்ந்து நாங்கள் 3 பேரும் அவருடைய வீட்டிற்கு சென்றோம். அப்போது அவரது பெற்றோர் முன்னிலையில் எங்களை தரக்குறைவாக பேசியதுடன், கொன்றுவிடுவதாக மீண்டும் மிரட்டினார். அத்துடன் எங்கள் நண்பரான காட்வின் ராஜையும் சரமாரியாக குத்தினார்.

படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கவே நாங்கள் இருவரும் சேர்ந்து ஜான் பிரிட்டோவை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story