குன்னூர் அருகே, காட்டெருமை தாக்கி சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் - வனத்துறையினரை கண்டித்து சாலைமறியல்
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகளில் நுழைந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 10 சுற்றுலா பயணிகள் ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் அனைவரும் குன்னூர் அருகேயுள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.
நேற்று காலை மஞ்சக்கம்பை கோவிலுக்கு செல்ல அவர்கள் 10 பேரும் தேயிலை தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த காட்டெருமையை வனத்துறையினர் விரட்டிக் கொண்டிருந்தனர். ஆக்ரோஷத்துடன் இருந்த காட்டெருமை ஒன்று அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகளை ஓட,ஓட துரத்தியது. அப்போது வாழப்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரியங்கா தம்பதியினரின் மகள் ஸ்ருதிகா (12) ஆகிய 2 பேரையும் தாக்கியது.
இதில் தனலட்சுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமி ஸ்ருதிகாவுக்கு கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தநிலையில், வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொலக்கம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story