கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு


கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு
x
தினத்தந்தி 22 May 2019 11:00 PM GMT (Updated: 22 May 2019 9:40 PM GMT)

கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு கொடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு வெட்டுகாட்டு வலசு நல்லிதோட்டம் பகுதியை சேர்ந்த மணி (வயது 45) என்பவர் தனது கணவர் கர்ணன் மற்றும் உறவினர்களுடன் வந்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது கணவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.92 ஆயிரம் கடன் வாங்கி இருந்தோம். அதற்கு பதிலாக அந்த நபர் எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை கிரய அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டார். பணத்தை கொடுத்ததும் சொத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறினார்.

கடந்த 2009-ம் ஆண்டு அதே நபரிடம் மேலும் ரூ.2 லட்சம் கடன் வாங்கினோம். இதற்காக மாதந்தோறும் ரூ.12 ஆயிரத்து 500 செலுத்தி வந்தோம். மேலும் அவரிடம் எங்களுடைய ஆட்டோ, காரின் ஆர்.சி. புத்தகத்தை ஒப்படைத்தோம்.

நாங்கள் வாங்கிய ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு இதுவரை ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் செலுத்தி உள்ளோம். ஆனால் தற்போது அவர் மேலும் ரூ.4 லட்சம் கந்து வட்டியாக கொடுத்தால் தான் ஆட்டோ மற்றும் காரின் ஆர்.சி. புத்தகம் மற்றும் சொத்து பத்திரங்களை தருவதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி கடன் கொடுத்தவர், இன்னொருவருடன் சேர்ந்து வந்து எனது கணவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் எனது கணவர் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து நாங்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு தற்போது எனது கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களை போன்று அந்த நபர் பலரிடமும் கந்து வட்டி கேட்டு மிரட்டி வருகிறார். எனவே எங்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டும் நபர் மீதும், அவருக்கு உதவியாக இருக்கும் நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

Next Story