ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே திருமண அழைப்பிதழில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயருக்கு பின்னால் எம்.பி. பதவி


ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே திருமண அழைப்பிதழில் அ.தி.மு.க. வேட்பாளர் பெயருக்கு பின்னால் எம்.பி. பதவி
x
தினத்தந்தி 23 May 2019 4:00 AM IST (Updated: 23 May 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே திருமண அழைப்பிதழில் திருப்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் பெயருக்கு பின்னால் எம்.பி. என்று அச்சடிக்கப்பட்ட தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனுப்பர்பாளையம்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஒருவர்தான் வெற்றி பெற முடியும். அதற்கான சான்றிதழ் உரிய அதிகாரியிடம் இருந்து முறைப்படி பெற்ற பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) என்ற தகுதி அந்த வேட்பாளருக்கு கிடைக்கிறது. ஆனால் அதீக நம்பிக்கையாலும், கட்சி மீதுள்ள பற்றாலும் தேர்தல் முடிவுகள் வெளியேகும் முன்பே தங்களுக்கு பிடித்த அபிமான வேட்பாளர்களை, சிலர் எம்.பி. என்று கல்வெட்டுகளில் பெயர் எழுதுவதும், அழைப்பிதழ்களில் பெயரை அச்சடிப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வாக்குகள் எண்ணப்படும் முன்பே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம். ஆனந்தன் பெயருக்கு பின்னால் எம்.பி. என்று குறிப்பிட்டு ஒரு திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட 10-வது வார்டு பிரதிநிதியாக இருப்பவர் மர்பி ராஜா. இவருடைய மகள் திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அழைப்பிதழில்தான் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. வேட்பாளரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெயரை தொடர்ந்து எம்.பி. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குச்சனூர் கோவில் கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெயருடன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிட தக்கது. 

Next Story