பொது செயல் திட்டத்தை சித்தராமையா உருவாக்கவில்லை : எச்.விஸ்வநாத் பகிரங்க குற்றச்சாட்டு


பொது செயல் திட்டத்தை சித்தராமையா உருவாக்கவில்லை : எச்.விஸ்வநாத் பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 May 2019 11:45 PM GMT (Updated: 22 May 2019 9:45 PM GMT)

கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு ஆகியும் பொது செயல் திட்டத்தை சித்தராமையா உருவாக்கவில்லை என்று எச்.விஸ்வநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல், 

ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் எச்.விஸ்வநாத் கோலாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள சித்தராமையா, இரு கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். அதைவிட ெபாது செயல் திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். இந்த கூட்டணி அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

பொது செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் மாநில தலைவர்களின் பொறுப்பு. ஆனால் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும் அந்த திட்டத்தை உருவாக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் இரு தலைவர்களும் ஒருங்கிணைப்பு குழுவில் இல்லை. சித்தராமையாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.

ஒருங்கிணைப்பு குழு என்பது தனிப்பட்ட அமைப்பா?. நல்ல திட்டங்களையும், கொள்கைகளை வகுத்து நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. இதுபற்றி நான் மட்டுமே பேசுகிறேன்.

நான் எனது அதிகார வரம்புக்குட்பட்டு கடமைகள் குறித்து அரசுக்கு நினைவூட்டுகிறேன். இதை தவிர்த்து சித்தராமையாவுக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை.

மத்தியில் 10 ஆண்டுகள் மன்ேமாகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த போது கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சோனியா காந்தி இருந்தார். அவர் சிறப்பான பொது செயல் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி கொடுத்தார்.

நாளை(இன்று) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழும் என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் அதுபோல ஒன்றும் நடக்காது. தேவேகவுடா, ராகுல் காந்தியின் ஆசியுடன் இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

முதல்-மந்திரி குமாரசாமி மனதைரியம் கொண்டவர். அவருக்கு கடவுளின் ஆசி உள்ளது. அதுபோல கர்நாடகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கும் எண்ணம் இல்லை. காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து உள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. இதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story