முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி


முதல்-மந்திரி குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் : மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 12:15 AM GMT (Updated: 22 May 2019 10:03 PM GMT)

முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்வார் என்றும், கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு, 

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. அதை தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பெங்களூருவில் தேவேகவுடாவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு வேறு வேலை இல்லை. சந்திரபாபுநாயுடுவின் மனநிலையே குமாரசாமிக்கும் உள்ளது. ஆந்திர முதல்-மந்திரி தனது மரியாதையை இழந்துவிட்டார். அதிகாரத்தை இழந்தவர்கள், தோல்வி அடைபவர்கள் அனைவரும் ஒன்றாக சேருகிறார்கள். நாளை (அதாவது இன்று) மாலை வரை மட்டுமே குமாரசாமி முதல்-மந்திரியாக நீடிப்பார்.

இன்றே அவர் பதவியை ராஜினாமா செய்வார். கர்நாடகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மற்றும் சித்தராமையாவுக்கு எதிராக பேசியுள்ளார். உண்மையை நீண்ட நாட்கள் மூடிமறைக்க முடியாது.

கர்நாடகத்தில் ஆணவப்போக்குடன் செயல்படும் தலைவர் சித்தராமையா. அவரை போன்ற ஆணவமிக்க தலைவர் வேறு யாருமில்லை. நான் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியில் இருக்கிறேன். அதில் நான் வெற்றி பெறுவேன். இந்த முறை வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் சற்று குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.


Next Story