மத்தியில் அமைய இருக்கும், பா.ஜ.க. ஆட்சியில் அ.தி.மு.க.வின் ஆளுமை இருக்கும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி


மத்தியில் அமைய இருக்கும், பா.ஜ.க. ஆட்சியில் அ.தி.மு.க.வின் ஆளுமை இருக்கும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 4:23 AM IST (Updated: 23 May 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவுக்கு பின்பு மத்தியில் அமையவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் அ.தி.மு.க.வின் ஆளுமை பலமாக இருக்கும் என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர்,

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்பு எட்டு வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். எட்டு வழிச்சாலை குறித்து மக்களின் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது, அவரது கருத்தாக இருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு பின்பு அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இது ஆழமான கூட்டணி. ஆழ்ந்து சிந்தித்து அமைக்கப்பட்ட கூட்டணி. மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் கூறுகின்றனர். தேர்தலில் தோல்வியை சந்திக்க உள்ளவர்கள் இதுபோன்ற காரணங்களை கூறுவார்கள். நாளை (இன்று) தேர்தல் முடிவு வெளியான பின்பு எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்பட்டதாக வரிசையாக பேட்டி கொடுப்பார்கள். அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்.

டி.டி.வி.தினகரனுக்கு எதிர்காலம் இல்லை. பதவியை எதிர்பார்த்து அக்கட்சியில் சேர்ந்தவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு மீண்டும் தங்களது கட்சிக்கு திரும்பி விடுவார்கள். அ.தி.மு.க.வில் பிளவு ஏதும் ஏற்படவில்லை. ஒரு சிதறல்தான் ஏற்பட்டது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் முடிவுக்கு பின்பு அந்த சிதறலும் சரி செய்யப்பட்டுவிடும். வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க.வை தொடங்கியபோது சென்னையில் ஏழுமலை தலைமையில் விடிய, விடிய ஊர்வலம் நடந்தது. வைகோ மதுரை விமான நிலையத்திற்கு வந்தால், விருதுநகர் வரை கார்கள் வரிசையாக நிற்கும். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இதே நிலைமை தான் தினகரனுக்கும் ஏற்படும்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் மாற்றம் ஏற்படும் என்று கருணாஸ் கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் என்ன அ.தி.மு.க. மாவட்ட செயலாளரா அல்லது உயர்மட்ட குழு உறுப்பினரா, அவர் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தேர்தலுக்கு பின்னர் மத்தியில் மோடி தலைமையில் அமையவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் அ.தி.மு.க.வின் ஆளுமை பலமாக இருக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் நலனுக்கான நல்லாட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அ.தி. மு.க. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story