தண்ணீர் தட்டுப்பாடு, நயினார்கோவில் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கோரிக்கை


தண்ணீர் தட்டுப்பாடு, நயினார்கோவில் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2019 3:30 AM IST (Updated: 23 May 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நயினார்கோவில்,

நயினார்கோவில் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் அன்றாட தண்ணீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் இப்பகுதிகளில் உள்ள கண்மாய், குளம், கிணறுகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததாலும், கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் இந்த பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் பல கிராமங்களில் குடிநீர் திட்டங்களும் பயனளிக்காமல் போனதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் சேகரித்து வரும் அவலம் நீடிக்கிறது.

பொதுமக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில் கால்நடைகள் தண்ணீரை தேடி பரிதவித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நயினார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story