திருப்பூரில், கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு - நண்பருடன் குளித்துக்கொண்டிருந்தபோது பரிதாபம்


திருப்பூரில், கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு - நண்பருடன் குளித்துக்கொண்டிருந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 23 May 2019 4:00 AM IST (Updated: 23 May 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார். நண்பருடன் குளித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நல்லூர்,

திருப்பூர் கே.என்.பி. சுப்பிரமணியபுரம்புதூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (41). இவர்களுடைய மகன்கள் மோகன்சஞ்சய் (19) மற்றும் ஜெகந்தன் சூர்யா (17). ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் மோகன்சஞ்சய் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் மோகன்சஞ்சய் தனது நண்பர்களுடன் சென்று கிரிக்கெட் விளையாடி வந்தார். வழக்கம்போல் நேற்று காலையிலும் மோகன்சஞ்சய் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அசோக் (19) என்பவருடன் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு, தனது தாயிடம் குளித்து விட்டு வருவதாக கூறினார்.

அதன்பின்னர் மோகன்சஞ்சய்யும், அவருடைய நண்பர் அசோக்கும் ராக்கியாபாளையம் முதல் வீதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மேக்கள தோட்டத்து கிணற்றுக்கு குளிக்க சென்றனர். 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலும் கிணற்றுக்குள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முதலில் கிணற்றுக்குள் இறங்கி அசோக் குளித்துக்கொண்டிருந்தார். மோகன்சஞ்சய்க்கு நீச்சல் தெரியாது என்பதால் காற்றடைத்த லாரி டியூப்பை மாட்டிக்கொண்டு குளித்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து (70) என்பவரும் தனது பேரன்கள் 2 பேரை அழைத்து வந்து கயிற்றில் அவர்களை கட்டி நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். இதற்கிடையில் அசோக் கிணற்றுக்குள் இருந்து மேலே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோகன்சஞ்சய் மாட்டி இருந்த லாரி டியூப் விலகியதால் அவர் தண்ணீருக்குள் மூழ்கினார்.

உடனே அவர் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று கூச்சலிட்டார். உடனே கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்த நாச்சிமுத்து மற்றும் அசோக் ஆகிய 2 பேரும் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால் அதற்குள் தண்ணீருக்குள் மூழ்கி கிணற்றின் அடிப்பகுதிக்கு மோகன் சஞ்சய் சென்று விட்டார். உடனே இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கும், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீருக்குள் மூழ்கி, இறந்த நிலையில் மோகன்சஞ்சயின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மோகன்சஞ்சயின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதனால் மருத்துவமனை வளாகமே சோகமயமாக காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் நண்பருடன் குளிக்க சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story