கோவை நாடாளுமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி
கோவை நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 9 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.
கோவை,
கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை தெற்கு, கோவை வடக்கு, சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னணியில் இருந்தார். முதல் சுற்றில் சூலூர் சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பி.ஆர்.நடராஜன் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். முதல் சுற்றில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 4 ஆயிரத்து 573 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 3 ஆயிரத்து 744 வாக்குகள் தான் பெற்றிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சூலூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று 6 சட்டமன்ற தொகுதியிலும் முன்னணி வகித்தார்.
ஆனால் 2-வது சுற்றில் கோவை வடக்கு தொகுதியில் மட்டும் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 ஆயிரத்து 108 வாக்குகள் பெற்று அந்த தொகுதியில் முன்னணி பெற்றிருந்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் 2 ஆயிரத்து 899 வாக்குகள் பெற்று பின் தங்கியிருந்தார். ஆனால் 3-வது சுற்றில் கோவை வடக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் 4 ஆயிரத்து 52 வாக்குகள் பெற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் 3 ஆயிரத்து 18 வாக்குகள் பெற்றார்.
அதைத் தொடர்ந்து எண்ணப்பட்ட ஒவ்வொரு சுற்றிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னணியில் இருந்தார். கோவை தொகுதியில் எண்ணப்பட்ட ஒவ்வொரு சுற்றிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சராசரியாக 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னணி வகித்தார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 425 வாக்குச்சாவடி களில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு 20 மேஜைகள் போடப்பட்டிருந்ததால் அந்த தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளில் எண்ணி முடிக்கப் பட்டன. ஆனால் பல்லடம் தொகுதியில் 407 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் பதிவான வாக்குகளை எண்ணு வதற்கு இடப் பற்றாக்குறை காரணமாக 14 மேஜைகள் தான் போடப்பட்டிருந்தன. இதனால் அந்த தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு 30 சுற்றுகள் தேவைப்பட்டன. இதனால் பல்லடம் தொகுதி வாக்குகள் முழுவதும் எண்ணி முடிக்க அதிக நேரம் ஆனது. எனவே மற்ற 5 சட்டமன்ற தொகுதி வாக்குகளை எண்ணி முடித்திருந்தாலும் பல்லடம் தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு காலதாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரத்தை எண்ணுவதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டதால் கோவை தொகுதி தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் காலதாமதம் ஆனது.
கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் மொத்தம் 30 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் அனைத்து சுற்றிலுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்து வந்தார். 30-வது சுற்று முடிவில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை விட ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தலா 5 வி.வி.பேட் எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. அதில் பதிவாகியிருந்த ஒப்புகை சீட்டுகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மேலிட பொது பார்வையாளர் ரேணி ஜெயபால் ஆகியோர் வழங்கினார்கள்.
பி.ஆர்.நடராஜன் கடந்த 2009-ம் ஆண்டு கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்-19,58,577
பதிவானவை-15,20,276
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி
பி.ஆர்.நடராஜன்(மார்க்சிஸ்ட் கம்யூ.)-5,70,514
சி.பி.ராதாகிருஷ்ணன்(பா.ஜனதா)-3,91,505
ஆர்.மகேந்திரன்(மக்கள் நீதி மய்யம்)-1,44,829
கல்யாணசுந்தரம்(நாம் தமிழர்)-60,400
என்.ஆர்.அப்பாதுரை(அ.ம.மு.க.)-38,024
பி.கோவிந்தன்(பகுஜன் சமாஜ்)-4309
பி.மணிகண்டன்(தமிழ்நாடு இளைஞர் கட்சி)-2304
ஜி.கனகசபாபதி(சுயே)-2722
வி.கிருஷ்ணன்(சுயே)-2913
எம்.தனபால்(சுயே)-1535
ஏ.நடராஜன்(சுயே)-1370
வி.புஷ்பானந்தம் (சுயே)-1421
பி.ராதாகிருஷ்ணன் (சுயே)-2633
யு.ராதாகிருஷ்ணன் (சுயே)-1623
நோட்டா-23,162.
Related Tags :
Next Story