ஆசனூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய புலி - வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்


ஆசனூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய புலி - வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 23 May 2019 5:50 PM GMT)

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாடியதால் வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களில் யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

ஆசனூர் வனப்பகுதியில் திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் கார், பஸ், லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு புலி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வந்து நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சிறிது நேரத்தில் புலி மெதுவாக நடந்து நடுரோட்டில் வந்து நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்கள் சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டார்கள்.

புலி வாகனங்களின் சத்தத்தை கேட்டால் அடர்ந்த காட்டுக்குள் ஓடிவிடும். ஆனால் இது மெதுவாக ரோட்டில் அங்கும், இங்கும் நடமாடியது. பின்னர் சாலை ஓரத்தில் சென்று நின்றது. அதனால் புலிக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நோய்வாய் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சுமார் 10 நிமிடம் சாலையோரத்தில் புலி நின்றதால் வாகன ஓட்டிகள் சிலர் துணிச்சலாக செல்போனில் படம் பிடித்தார்கள். அதன்பின்னர் புலி மெதுவாக காட்டுக்குள் சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் செல்ல தொடங்கின.

Next Story