சிறுமுகை அருகே, பவானி ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் சாவு


சிறுமுகை அருகே, பவானி ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 23 May 2019 10:00 PM GMT (Updated: 23 May 2019 5:55 PM GMT)

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேட்டுப்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கருவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) விவசாயி. இவர் சிறுமுகை அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரம்பகாடு என்னும் இடத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த மழைக்காலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து, இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

தற்போது பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறையத்தொடங்கியது. இதனையடுத்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக முருகேசன் தனது மனைவி வசந்தாமணி, மகள்கள் கவுரி (22) பிரபா (16) அண்ணன் மகன் பிரதீப் (18) மற்றும் உறவினர்கள் சேகர் (21) உள்பட 7 பேர் வீட்டில் இருந்து காலை புறப்பட்டு பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் விவசாய விளை நிலத்தை சுத்தம் செய்து விட்டு, அனைவரும் அங்கேயே உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணிக்கு பிரபா பவானி ஆற்றில் குளிக்கச்சென்றார். அப்போது அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்ததை கண்ட அவருடைய தந்தை முருகேசன், அக்காள் கவுரி, உறவினர் பிரதீப் ஆகியோர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர்.

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து பிரபாவை மீட்டனர். ஆனால் காப்பற்ற சென்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக்கண்ட கரையில் இருந்த உறவினர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 3 பேரின் உடலை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு முருகேசன், பிரதீப் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாலை நீண்ட நேரம் ஆனதால் கவுரியின் உடலை தேடும்பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கருவலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் உடலை தேடும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தீயணைப்பு படைவீரர்கள் தெரிவித்தனர். 

Next Story