தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அமோக வெற்றி


தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அமோக வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 4:30 AM IST (Updated: 24 May 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அமோக வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான த.மா.கா. சார்பில் என்.ஆர்.நடராஜன், தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அ.ம.மு.க. சார்பில் பொன்.முருகேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் சம்பத் ராமதாஸ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஸ்டாலின், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பனசை அரங்கன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கும், தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கும் நேரடி போட்டி நிலவியது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடந்தது. தஞ்சை, திருவையாறு, பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனி அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு தொகுதிக்கு 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் 6 அறைகளிலும் 84 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. அதன் பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு வாக்கும் எண்ணும் பணி நடந்தது. குறைந்தபட்சமாக பேராவூரணி சட்டசபை தொகுதியில் 19 சுற்றுகளும், அதிகபட்சமாக திருவையாறு சட்டசபை தொகுதியில் 22 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட்டன.

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் முன்னிலையில் இருந்தார். இறுதியில் 22 சுற்றுகள் நிறைவடைந்தபோது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.நடராஜனை விட 3 லட்சத்து 63 ஆயிரத்து 37 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள்- 14,60,266

பதிவானவை-10,55,399

செல்லாதவை-829

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்(தி.மு.க.)-5,80,652

என்.ஆர்.நடராஜன் (த.மா.கா)-2,17,615

பொன்.முருகேசன் (அ.ம.மு.க.)-1,01,021

கிருஷ்ணகுமார்(நாம் தமிழர் கட்சி)-56,891

சம்பத் ராமதாஸ்(மக்கள் நீதி மய்யம்)-23,050

ஸ்டாலின்(பகுஜன் சமாஜ் கட்சி)-5,757

பனசை அரங்கன்(தேசிய மக்கள் கட்சி)-2,010

அப்துல்புகாரி (சுயேச்சை)- 1,226

சமந்தா(சுயேச்சை)-2,608

செல்வராஜ் (சுயேச்சை)- 27,878

முத்துவேல் (சுயேச்சை)- 4,428

விஜயகுமார்(சுயேச்சை)- 5,361

நோட்டா-14,847.

அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட 10 பேர் டெபாசிட் இழந்தனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதம்

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது 21 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஆனது. இதனால் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன. மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வி.வி.பேட் எந்திரங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 எந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டன.

இதனால் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றதை மாவட்ட தேர்தல் அதிகாரி அண்ணாதுரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஆனது. பழுதான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story