கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 6:57 PM GMT)

கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் ஆறு - குளங்கள் உள்ளன. இந்த ஆறு- குளங்களை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் மக்கள் குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். கீழ்வேளூர் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 5-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலும் குளங்கள் உள்ளன. இதில் ஒரு சில குளங்களை தவிர பெரும்பாலான குளங்களில் தண்ணீர் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்தநிலையில் குருக்கத்தி ஊராட்சி மெயின் சாலை அருகே உள்ள குளத்தில் தண்ணீர் இன்றி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டேங்கர் லாரிகள்

அதிலும் குறிப்பாக குளங்களில் நீர் நிலை வற்றியதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பருத்தி, வாழை உள்ளிட்டவைகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் அனைத்து பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஆறுகளை கடந்த ஆண்டு போலவே நடப்பாண்டில் குடி மராமத்து பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்வேளூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குளங்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story