கரூர் தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி


கரூர் தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 23 May 2019 7:43 PM GMT)

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதியில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 115 ஆண்கள், 6 லட்சத்து 96 ஆயிரத்து 623 பெண்கள், இதரர் 64 என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக, நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. சார்பில் தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஹரிஹரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 11,02,722 வாக்குகள் பதிவாகின. இது 79.11 சதவீதம் ஆகும்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசாருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தவர்கள் அனைவரும், நுழைவு வாயிலில் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்கிடையே சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குகள் எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. வேட்பாளர்களின் முகவர்களை தவிர வேறு யாரும், வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மேலும் அறிவிப்பு பலகையிலும் எழுதப்பட்டது.

முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்ததால், காலையிலேயே அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். மேலும் அ.தி.மு.க.வினர் சிலரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர். 19-வது சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 6 லட்சத்து 48 ஆயிரத்து 254 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 441 வாக்குகளும் பெற்றிருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை விட 3 லட்சத்து 92 ஆயிரத்து 813 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

மேலும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 6 ஆயிரத்து 823 தபால் ஓட்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 698 தபால் ஓட்டுகள் பதிவானது. ஆயிரம், ஆயிரம் தபால்களாக பிரித்து ஓட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 3 ஆயிரம் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 2,256 தபால் ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை 363 தபால் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். தொடர்ந்து தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. 

Next Story