அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி முகம்


அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி முகம்
x
தினத்தந்தி 24 May 2019 4:45 AM IST (Updated: 24 May 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வெற்றி உறுதியானது.

கரூர்,

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் 99 ஆயிரத்து 52 ஆண் வேட்பாளர்கள், 1 லட்சத்து 6 ஆயிரத்து 219 பெண் வேட்பாளர்கள், இதரர் 2 என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர்.

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் ஹமீது, மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் உள்ளிட்ட 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 84.33 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தவர்களை, நவீன ஸ்கேன் எந்திரம் மூலம் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர். குறிப்பாக புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.வேட்பாளர்களின் முகவர்களிடம் செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் ஏதேனும் வைத்துள்ளனரா என்று சோதனை செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை மைய வளாகங்கள், வாக்கு எண்ணும் அறை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த கணினி திரை முலம் வாக்கு எண்ணிக்கை மைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்வுகளை போலீசார் கண்காணித்தனர்.

தொடக்கம் முதலே முன்னிலை

வாக்கு எண்ணிக்கையின்போது முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல், தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த அறையில் இருந்த மின்னணு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அமைக்கப்பட்டிருந்த 14 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மேலும் அறிவிப்பு பலகையிலும் எழுதப்பட்டது. இதில் முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை விட அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் இதே நிலை தொடர்ந்தது.

செந்தில்பாலாஜி வெற்றி முகம்

18-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி 97,364 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் 59,550 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் செந்தில்பாலாஜி, செந்தில்நாதனை விட 37,814 வாக்குகள் அதிகம் பெற்றார். இதனால் அவருடைய வெற்றி உறுதியானது. இதற்கிடையே 17-வது சுற்று நடந்தபோது, குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட யாருக்கு வாக்களித்தோம் என்று அறியக்கூடிய எந்திரத்தில் (வி.வி.பேட்) உள்ள ஒப்புகை சீட்டுகளுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்கும் பணி நடந்தது.

Next Story