பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 23 May 2019 7:50 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தர் சுமார் 4 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை தோற்கடித்தார்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.) நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வான எம்.ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கே.சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்.முத்துலட்சுமி ஆகியோர் உள்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,91,011 ஆகும். இவர்களில் 11,03,160 பேர்(தபால் ஓட்டு உள்பட) இந்த தேர்தலில் வாக்களித்து இருந்தனர்.

‘சீல்’ வைப்பு

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ‘விவிபேட்’ எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னர் அவை, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும், மொத்தம் 10,164 தபால் வாக்குகள் வழங்கப்பட்டதில் 8,406 பேர் தபால் மூலம் வாக்களித்திருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண்பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர் மற்றும் ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் உள்பட மொத்தம் 306 பேர் ஈடுபட்டனர்.

பாரிவேந்தர் முன்னிலை

இதில் முதல் சுற்றில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் 32,787 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 14,710 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சாந்தி 2,560 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் எம்.ராஜசேகரன் 1,948 வாக்குகளும் பெற்று இருந்தனர். முதல் சுற்று முடிவில் 18,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் முன்னிலை வகித்தார்.

2-வது சுற்றில் 39,848 வாக்குகள் வித்தியாசத்திலும், 3-வது சுற்றில் 58,508 வாக்குகள் வித்தியாசத்திலும், 4-வது சுற்றில் 78,940 வாக்குகள் வித்தியாசத்திலும், 5-வது சுற்றில் 99,303 வாக்குகள் வித்தியாசத்திலும், 6-வது சுற்றில் 1,19,387 வாக்குகள் வித்தியாசத்திலும், 7-வது சுற்றில் 1,40,206 வாக்குகள் வித்தியாசத்திலும், 8-வது சுற்றில் 1,59,246 வாக்குகள் வித்தியாசத்திலும், 9-வது சுற்றில் 1,78,081 வாக்குகள் வித்தியாசத்திலும், 10-வது சுற்றில் 1,98,824 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை விட ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலைவகித்தார்.

மகிழ்ச்சி

தொடர்ந்து அதிக வாக்குவித்தியாசத்தில் பாரிவேந்தர் முன்னிலை வகித்ததால் அவருடைய வெற்றி உறுதியானது. இதனால் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் வெற்றிக்கனியை பறிக்கமுடியாது என்று தெரிந்ததும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சோகம் அடைந்தனர்.

தொடர்ந்து மீதம் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு சுற்றுகள் வாரியாக அடுத்தடுத்து முடிவுகள் வெளியிடப்பட்டன. 11-வது சுற்று முடிவில் 2,18,922 வாக்கு வித்தியாசத்திலும், 12-வது சுற்று முடிவில் 2,40,816 வாக்கு வித்தியாசத்திலும், 13-வது சுற்று முடிவில் 2,63,244 வாக்கு வித்தியாசத்திலும், 14-வது சுற்று முடிவில் 2,84,910 வாக்கு வித்தியாசத்திலும் பாரிவேந்தர் முன்னிலையில் இருந்தார். இது 15-வது சுற்று முடிவில் வாக்கு வித்தியாசம் 3,06,987 ஆனது.

393 செல்லாத ஓட்டுகள்

16-வது சுற்று முடிவில் 3,26,081 வாக்கு வித்தியாசத்திலும், 17-வது சுற்றில் 3,47,540 வாக்கு வித்தியாசத்திலும், 18-வது சுற்றில் 3,67,991 வாக்கு வித்தியாசத்திலும், 19-வது சுற்றில் 3,79,635 வாக்கு வித்தியாசத்திலும், 20-வது சுற்றில் 3,84,485 வாக்கு வித்தியாசத்திலும், 21-வது சுற்றில் 3,87,886 வாக்கு வித்தியாசத்திலும், 22-வது சுற்றில் 3,90,772 வாக்கு வித்தியாசத்திலும், 23-வது சுற்றில் 3,94,245 வாக்கு வித்தியாசத்திலும் பாரிவேந்தர் முன்னிலையில் இருந்தார்.

இதில் 24-வது சுற்று முடிவில் பாரிவேந்தர் (ஐ.ஜே.கே.) 6,75,561 வாக்குகளும், என்.ஆர்.சிவபதி (அ.தி.மு.க.) 2,75,753 வாக்குகளும், கே.சாந்தி (நாம் தமிழர் கட்சி) 53,154 வாக்குகளும், எம்.ராஜசேகரன் (அ.ம.மு.க.) 45,347 வாக்குகளும் பெற்று இருந்தனர். பின்னர் தபால் ஓட்டுகள் சேர்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தபால் வாக்குகளில் பாரிவேந்தருக்கு 6,692 வாக்குகளும், என்.ஆர்.சிவபதிக்கு 740 வாக்குகளும், கே.சாந்திக்கு 316 வாக்குகளும், அ.ம.மு.க.வுக்கு 102 ஓட்டுகளும், நோட்டாவுக்கு 106 ஓட்டுகளும் கிடைத்தன. இதில் தபால் வாக்குகளில் 393 ஓட்டுகள் செல்லாதவை.

இறுதியில் பாரிவேந்தர் (ஐ.ஜே.கே.) 6,83,697 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை 4 லட்சத்து 3 ஆயிரத்து 518 வாக்குள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். என்.ஆர்.சிவபதி (அ.தி.மு.க.) 2,80,179 வாக்குகளும், கே.சாந்தி (நாம் தமிழர் கட்சி) 53,528 வாக்குகளும், எம்.ராஜசேகரன் (அ.ம.மு.க.) 45,591 வாக்குகளும் பெற்று இருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தவிர 17 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு சென்று முத்திரை பதிக்க உள்ளார். 

Next Story