கீரமங்கலத்தில் நாய் கடித்து மான் சாவு


கீரமங்கலத்தில் நாய் கடித்து மான் சாவு
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 7:57 PM GMT)

கீரமங்கலத்தில் தண்ணீர் தேடி சென்ற போது நாய் கடித்து மான் செத்தது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு, சேந்தன்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காடுகள் உள்ளது. இந்த பெரிய காட்டில் மயில், மான் போன்ற உயிரினங்களும் அதிகமாக வாழ்கின்றன. ஆனால் இந்த உயிரினங்களுக்காக எந்த ஒரு இடத்திலும் தண்ணீர் தொட்டிகள் இல்லை. அதனால் இந்த காடுகளில் வாழும் உயிரினங்கள் தண்ணீரை தேடி வெளியிடங்களுக்கு செல்லும் போது விபத்துகளிலும், வேட்டைக்கார்களாலும், நாய்களாலும் ஆபத்து ஏற்படுகிறது.

நாய் கடித்து மான் சாவு

இந்த நிலையில், கீரமங்கலம் மேற்று, சேந்தன்குடி முந்திரிக்காட்டில் இருந்து மான் ஒன்று தண்ணீருக்காக காட்டை ஒட்டியுள்ள விவசாயத்திற்கான ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு நாய் மானை விரட்டி கழுத்தில் கடித்துள்ளது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் தோட்டத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து, நாயை விரட்டி விட்டு மானை பார்த்த போது அதிகமாக ரத்தம் வெளியேறி மான் இறந்தது. இதையடுத்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, இறந்த மானை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தண்ணீர் தொட்டிகள் வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள முந்திரிக்காட்டில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் அவற்றை காப்பாற்றும் விதமாக வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவில்லை. இதனால் காடுகளில் இருக்கும் மயில், முயல், மான், மற்றும் பறவைகள் தண்ணீரை தேடி மாற்று இடங்களுக்கு செல்லும் போது, ஆபத்தில் சிக்கி உயிர் இழக்கிறது. அப்படித்தான் தண்ணீரை தேடி வந்த மானை நாய் கடித்திருக்கிறது. மேலும் இந்த காடுகளில் பல மான்கள் வாழ்கின்றன. அதனால் வனத்துறையினர் விலங்குகள், பறவைகளுக்காக காட்டுக்குள் தண்ணீர் தொட்டிகளை அமைத்தால் அந்த உயிரினங்களை காப்பாற்றலாம் என்றனர். 

Next Story